மிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1969-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது. அதை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று.

திமுகவின் ஸ்தாபகராக , பலம் பொருந்திய நேர்மையான தலைவராக விளங்கிய அண்ணாத்துரை 1969 பிப்ரவரி 3 ல் இறக்கிறார். அவர் இறந்தவுடன் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக இருக்கிறார். பின்னர் சிறிது நாட்களில் நடந்த பொதுக்குழுவில் எம்.ஜி.ஆரின் ஆதரவு மற்றும் சில பிரமுகர்களின் ஆதரவு காரணமாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஆட்சி நிர்வாகத்தின் சகல நுணுக்கங்களை யும் அறிந்திருந்தார். இதன் தொடர்ச்சியில் ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி அதில் நுணுக்கமான, வெளியே தெரியாத வகையில் ஊழல் செய்ய வேண்டும் என்ற கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்கத் தொடங்கினார்.

இந்நிலையில் அவர் ஆட்சியின் முதல் ஊழல் கூவம் நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் தொடங்கியது. அன்றைய காலகட்டத்தில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ரூ 3 கோடி ஒதுக்கப்பட்டது. இது செலவழிக்கப்படவில்லை. இந்த நிதி என்ன ஆயிற்று என்று கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கருணாநிதி பதிலளித்தார்.

அடுத்த நாள் கூவத்தில் முதலை என்று வதந்தி கிளப்பி விடப்பட்டது. சாக்கடையில் எப்படி முதலை வரும்? என்ற அடிப்படையான கேள்வியையும் தாண்டி இந்த வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

பின்னர் பணியாளர்கள் கூவத்தில் வேலை செய்ய பயப்படுகிறார்கள் என்றும் அதனால் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதன் தொடர்ச்சியில் பெரும் ஊழல் என்பது குளோப் தியேட்டர் ஊழல். அண்ணாசாலையில் இருக்கும் இந்த தியேட்டர் கட்டிடம் வட இந்தியாவை சார்ந்த குஷால்தாஸ் என்பவருக்கு சொந்தமானது.

இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால், தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வரவு 8000 ரூபாய். ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினான்காயிரம். வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.

வாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை இதனை தக்க வைக்க எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு, பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

இந்நிலையில் இதனை எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த வரதராஜ பிள்ளை அன்றைய ஆட்சியாளர்களை சந்திக்க விரும்பினார். அதற்காக அன்றைய திமுகவின் அதிகார மையமாக விளங்கிய முரசொலி மாறனை அணுகுகிறார்.  அவர் அதற்காக அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்க சொல்கிறார்.

உடனே வரதராஜ பிள்ளை அமைச்சர் ப.உ.சண்முகத்தை அணுகி இதற்கான தீர்வு என்ன என்று கேட்கும் போது அவர் சட்டதிருத்தம் கொண்டு வந்து உங்களுக்கே அந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளுமாறு செய்கிறோம். அதற்காக சில லட்சங்கள் தேவைப்படுகிறது என்றார்.

அதற்கான முன் பணமாக அன்றைய மதிப்பில் ரூ 30000 கொடுக்கப்படுகிறது. பின்னர் முதலமைச்சர் கருணா நிதியை சந்திக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவரை சந்திக்க  சென்ற வரதராஜபிள்ளையிடம் கருணாநிதி பேரம் பேசுகிறார். பின்னர் சில பல ஆயிரங்கள் கைமாறுகின்றன.

இதன் தொடர்ச்சியில் உடனடியாக சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அது தான் நீண்ட காலமாக குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர் உரிமையாக்கிக் கொள்ளும் வகையிலான தமிழ்நாடு குத்தகைதாரர் சட்டம்.

இந்த சட்டம் உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு  அதே வேகத்தில் அவருடைய ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் குளோபல் தியேட்டர் இடம் வரதராஜபிள்ளைக்கு சொந்தமானது.

இதை சர்க்காரிய கமிஷன்  தன் விசாரணை அறிக்கையில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

அன்றைய திமுக ஆட்சியில் அடுத்த பெரும் ஊழல் என்பது விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து அடிப்பது. அதாவது அன்றைய இந்திராகாந்தி அரசு  விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக அந்த நிலங்களை பூச்சிகளிடம் பாதுகாக்க வேண்டி தனியார் நிறுவன ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சி மருந்து அடிக்க நிதி ஒதுக்கீடு செய்தது.

அதனை மாநில அரசுகள் தங்கள் சிறிய பங்களிப்புகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்றது. இதனைத் தொடர்ந்து சில தனியார் நிறுவனங்கள் கருணாநிதியை அணுகின.

வேறு ஒரு நிறுவனம் அன்றைய திமுகவின் மிக முக்கிய பிரமுகரான அன்பில் தர்மலிங்கத்தை அணுகியது.. அதற்காக அவர் சதுர அடி கணக்கில் கமிஷன் பேரம் பேசினார். அதன் பிறகு அது கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர்  அது இறுதி செய்யப்பட்டு இறுதியில் அந்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டது.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சத்தியவாணி முத்துவிற்கே தெரியாமல் இத்தனை திரைமறைவு பேரங்களும் நடந்தன. இறுதியில் தன் பணிகளை ஆரம்பித்த   அந்த நிறுவனமும் கமிஷன்  அதிகரிப்பு, இயங்கு செலவு அதிகரிப்பு காரணமாக பணியை பாதியில் நிறுத்தியது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனையும் விலாவரியாக சர்க்காரியா கமிஷன் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

திமுகவின் வரலாற்றில் இன்றளவும் பேசப்படும் ஊழல் என்பது புகழ்பெற்ற வீராணம் ஊழல். அதாவது சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு  தண்ணீரை கொண்டுவரும் திட்டம் அது.

அதற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து நெய்வேலி பக்கத்தில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து பின்னர் அதை 198 கிலோமீட்டர் தூரம் தரைவழியாக குழாய் பதித்து சென்னைக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக பெரும் குழாய்களை பதிக்கவும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை செய்யவும்  பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. இறுதியில் சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் இறுதிசெய்யப்பட்டது.

இதனை விட தரம் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் பல இருந்தும் சத்தியநாராயண பிரதர்ஸுக்கே டெண்டர் கொடுக்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டியது சத்தியநாராயண பிரதர்ஸ் என்பது இந்த பணிக ளுக்கான முதன்மை நிறுவனமல்ல. ( Core Company). மாறாக அது குழாய்பதிக்க வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்திருந்தது.

தலைமைப்பொறியாளரின் ஆலோசனையையும், ஆட்சேபனையையும் மீறி இந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதற்கான காரணம் என்பது அதன் இயக்குநர் புருஷோத்தமன் முரசொலி மாறனின் தொழில்வகை நண்பர். இதற்கான பேரங்கள் எல்லாம் முதலில் மாறனிடம் தான் நடத்தப்பட்டன.  இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு அன்றைய நிலையில் 16 கோடி. இதற்கான கமிஷன் தொகை முரசொலி மாறன் மூலமாக கருணாநிதியிடம் பல லட்சங்கள் வழங்கப்பட்டன.

மேலும் வேலை தொடங்கவும், குழாய் அமைக்கும் தொழிற்சாலை தொடங்கவும் முன்பணம் வேண்டும் என்று இந்த நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனடிப்படையில் நிதித்துறை செயலாளரின் எதிர்ப்பையும் மீறி இந்த நிறுவனத்திற்கு முன்பணம் ரூபாய் 3.9 கோடி வழங்கப்பட்டது. சிறிய நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸ் இன்  நடைமுறை மூலதனம் முழுவதும் கமிஷனுக்காகவே செலவழிக்கப்பட்டதன் காரணமாக இந்நிறுவனம் வீராணம் திட்டத்திற்கான வேலையை தொடங்கி முடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அது பதித்த திட்டத்திற்கான குடிநீர் குழாய்கள் எல்லாம் கீறல் விழத்தொடங்கின.

ஆங்காங்கே பணிகள் பாதியில் நின்றன. இறுதியில் தன் சோக நிலையையும், எதார்த்ததையும் எழுதி வைத்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போதைய பத்திரிகைகளில் பெருஞ் செய்தியாக வெளிப்பட இறுதியில் கமிஷன் வாங்கிய நிறுவனத்தின் மீதே கருணாநிதி குற்றம் சுமத்தி தன் நிலைபாட்டை நியாயப்படுத்தினார்.

இப்படியான பல ஊழல்கள் அவர் காலத்தில் நடந்தன. இதன் தொடர்ச்சியில் 1976 எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் புகாரின் அடிப்படையில் இந்திரா காந்தி கருணாநிதியின் ஊழல்களை விசாரிப்ப தற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்.

அதில் கருணாநிதி ஆட்சிகால ஊழல்கள் விரிவாகவும், நுணுக்கமாகவும் விசாரணை செய்யப்பட்டன. இதற்காக பல தனியார் நிறுவனங்களின் அதிபர்கள், அரசு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.  இறுதியில் பிரதமர் இந்திராகாந்தியிடம் அவர் தன் விசாரணை அறிக்கையை சமர்பித்தார்.

அதில் பல ஊழல்கள் நேரடியாக நிரூபிக்க முடியாத அளவில் விஞ்ஞானபூர்வமான வழிகளில் செய்யப்பட்டி ருக்கின்றன என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் தன் ஆட்சிகால ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக  எமர்ஜென்சி காலத்தில் தன் ஆட்சியை கலைத்து, தன் கட்சியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய  இந்திரா காந்தியுடன் மீண்டும் கருணாநிதி கூட்டணி வைத்தார். இதன் மூலம் இந்த விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டது

. ஆனால் இன்றளவும் திமுகவின் மீதான களங்கமாக இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை இருக்கிறது.

கருணாநிதியின் ஊழல்கள் இவ்வாறு இருக்க எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஊழல் எப்படிப்பட்டது?

அவரின் 90 கள் ஆட்சி காலம் பெரும் ஊழல் காலமாகும். இன்றைய மன்னார்குடி உறவுகளின் பரந்து விரிந்த சொத்துகள் அனைத்துமே ஜெயலலிதா தன் ஆட்சிகாலத்தில் பெரும் ஊழல்கள் மூலம் சேர்த்தவை.

1991-1996 காலத்தில் அவர் செய்த முதல் ஊழல் ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்றதன் மூலம் வெளிப்பட்ட ஊழல். அதற்கு உடன்பட மறுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள நிலங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டன.

பலரின் சொத்துகள், வணிக நிறுவனங்கள் எல்லாம் மிரட்டி வாங்கப்பட்டன. குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கொடநாடு எஸ்டேட் விலைக்கு வாங்கப்பட்டது.

ஜெயலலிதா தன்னை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக சசிகலா தன் அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக தத்தெடுக்க செய்தார்.  பின்னர் சுதாகரனுக்கு சிவாஜி குடும்பத்தில் பெண் பார்க்கப்பட்டு இதன் மூலம் அந்த ஆட்சியின் இறுதிகாலத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தமிழ்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர்.

பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இந்த ஊழல்களை எல்லாம் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இறுதியில் புறச்சூழலின் நிர்பந்தம் காரணமாக சில வழக்குகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டன. பல வழக்குகளுக்கு ஆதாரங்கள் இருந்தும் ஜெயலலிதா தன் சாதி அடையாளம் சார்ந்த அதிகார லாபிகள் மூலம் அதிலிருந்து தப்பினார்.

பின்னர் 2001 காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் அன்றைக்கு அரசிற்கு இருந்த நிதி நெருக்கடி காரணமாக முந்தைய ஆட்சிகாலம் மாதிரி பெரும் கொள்ளையில் ஈடுபட முடியவில்லை. அதே நேரத்தில் பல திட்டப்பணிகள், நியமனங்கள் மூலம் தனக்கான பங்கை அடைந்தார்.

அதே நேரத்தில் முந்தைய பாடங்கள் காரணமாக அதனை விஞ்ஞான பூர்வமாக  செய்தார். இதன் தொடர்ச்சியில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது மாதிரி அவரின் 2011-2016 காலத்தில் தான் எல்லாவற்றையும் விட பெரும் ஊழலுக்கான திட்டம் வகுக்கப்பட்டது.

மாதந்தோறும் அமைச்சர்களிடமிருந்து தனக்கு வந்து சேர வேண்டிய பங்கு தொகையின் அளவு அதிகரிக்கப் பட்டது. அதற்காக அமைச்சர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

இதன் காரணமாக ஒரு வேளாண்துறை அதிகாரியின் தற்கொலையே நிகழ்ந்தது. மேலும் அரசின் திட்டப்பணிகள்,  நியமனங்கள், பதவி உயர்வுகள், பணி மாறுதல்கள் போன்றவற்றில் பெரும் தொகை கமிஷனாக நிர்ணயிக்கப்பட்டது.

முதலீட்டிற்காக வரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெரும் தொகை எதிர்பார்க்கப்பட்டது. சில நிறுவனங்கள் அதற்கு ஒத்துக்கொண்டன. அதன் மூலம் பெறப்பட்ட பணத்தில் தான் இன்றைக்கு சசிகலா குடும்பத்தினர் நிர்வாகம் செய்யும் சொத்துகள் வாங்கப்பட்டன.

குறிப்பாக சென்னை வேளச்சேரி ஜாஸ் வணிக வளாகம். இது ஜெயலலிதா ஒப்புதலுடன் சசிகலா குடும்பத்தின ரால் ஆந்திராவை சார்ந்த சத்தியம் நிறுவனத்திடமிருந்து மிரட்டல் மூலம் வாங்கப்பட்டது.

2015 ஜுனில் வாங்கப்பட்ட இந்நிறுவனம் பற்றிய செய்தியை எந்த பத்திரிகைகளிலும், காட்சி ஊடகங்களிலும் வராமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்.

பின்னர் தி இந்து ஆங்கில நாளிதழ் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டது. இதன் காரணமாக எழுந்த சலசலப்பை திசைதிருப்ப மக்கள் அதிகாரம் பாடகர் கோவனை கைது செய்து இந்த விஷயத்தை திசை திருப்பினார் ஜெயலலிதா.

அவரின் 2011-2016 காலகட்டத்தில் தான் ஊடகங்கள் அதிக அடக்குமுறையை சந்தித்தன. குறிப்பாக காட்சி ஊடகங்கள் அரசு கேபிள்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் எவ்வித முறைகேடுகள் பற்றிய செய்திகளும் வெளியே வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டன.

ஜெயலலிதா தன் ஆட்சிகாலத்தில் சசிகலாவுடன் சேர்ந்து செய்த ஊழல்களின் ஒட்டுமொத்த பணமும் இன்றைய மன்னார்குடி குடும்பத்தினரிடம் இருக்கிறது. அவர்கள் வருமானமே இல்லாமல் சேர்த்த சொத்துகளின் சூத்திரதாரியே ஜெயலலிதா தான். அவர் சசிகலா மூலம் நியமித்த பினாமிகள் தான் திவாகரன் தொடங்கி கீர்த்தனா வரையிலான இந்த குடும்பம்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக என்ற இருமை ஆட்சியே அதிக காலம் நடைபெற்றி ருக்கிறது என்ற அடிப்படையில் ஒப்பு நோக்கினால் அதிமுக ஆட்சிகாலத்தில் தான் அதிகமான ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன.

தமிழ்நாட்டு மக்களின் பிம்ப மயக்கம் காரணமாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தவறுகள் வாக்களர்களிடம் பெரிய அளவில் பாதிப்பை செலுத்தவில்லை.

1996 தேர்தலில் மக்களால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற  தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது அவருக்கு தன் குற்றங்கள், தவறுகள் மீதான அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தான் 2011-2016 காலத்தில் அதிக அளவிலான ஊழலை அவரால் செய்ய முடிந்தது. மேலும் தன் சர்வ வல்லமை காரணமாக ஊடகங்களை அவர் அடக்கி வைத்திருந்ததன் வெளிப்பாடாக எந்த ஊடகமும் அவரின் ஊழல்களை பெரிய அளவில் வெளிப்படுத்தவில்லை.

சில தருணங்களில் சில ஊடகங்கள் நேர்மாறான நிலையில் அவரிடம் ஆதாயம் கூட பெற்றன. அதே நேரத்தில் கருணாநிதி ஆட்சிகாலத்தில் நடைபெறும் ஊழல்கள்,  முறைகேடுகள் எல்லாம் பெரிய அளவில் செய்தியாகும். அதன் மூலம் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு தேர்தலில் தண்டிக்கப்படுவார்.

எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அவர் 15 ஆண்டுகள் மக்களால் தண்டிக்கப்பட்டதற்கான காரணம் இது தான். ஆக அரசியல் வரலாற்றின் அடிப்படையில் கருணாநிதி ஊழலின் ஊற்றுக்கண் என்றால் ஜெயலலிதா அதன் பெருவெள்ளம் எனலாம்.

இன்றைய தாராளமய காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி என்பதன் பெயரில் செய்யப்படும் ஊழல்கள் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய,  சமூக ஏற்றத்தாழ்வுகளை  உருவாக்கக்கூடிய அறமற்ற செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

mohammed.peer1@gmail.com