சென்னை: திமுக அட்சியில் “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்”  என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி,  அமமுக தலைவர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேரடி நியமனம் மூலம்  அரசு  பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க  என்ஐஏ கடிதம் அனுப்பி உள்ளதாக, அந்த  தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல  ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.  அதாவது, அமைச்சர் கே.என்.நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில்  ஒரு அரசு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக பணம் (Cash for job Scam) பெற்றுள்ளதாகவும், அந்த பணம், ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது  தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

{ திமுக அரசின் இந்த ஊழலால்  பல்லாயிரக்கணக்கான திறமையான தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும்  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

{ தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்  ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

{ திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

{ அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த விடியா திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும்,

இதில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் நடத்திய சோதனைகளின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

‘JOB RACKET’ முறையில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் திரு.@KN_NEHRU மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம்  ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், அந்த பணத்தை ஒருசில நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த இமாலய ஊழல் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய காலாக்கட்டங்களில் நடைபெற்றதையும், இது தொடர்பாக கிடைத்த பல ஆவணங்களை அமலாக்கத்துறை தமிழக காவல்துறை டி.ஜி.பி-க்கு அறிக்கையுடன் சமர்ப்பித்து, ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களும் இணைக்கப்பட்டு, இந்த அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தமிழக காவல்துறை இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான் தங்களால் சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி அவர்கள் இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு முதல் தகவல் அறிக்கையை உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை மூலம் பதிவு செய்ய வலியுறுத்துகிறேன்.

பொம்மை முதலமைச்சர் @mkstalin காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி.

அரசுப்பணி என்பது பல்வேறு இளைஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க இரவு, பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை, தங்களின் கமிஷன் கொள்ளைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்! என விமர்சித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

“காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் தி.மு.க. அரசின் ஊழல் மோகத்தை அடக்க சி.பி.ஐ விசாரணை வேண்டும்” எனத் தமிழக பா.ஜ.க. சார்பாக நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.

எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

நகராட்சி நிர்வாகத் துறையில் வேலைவாய்ப்ப்பு அளிப்பதாக கூறி பெரும் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. 2538 பணிகளுக்கு தலா 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகக் கூறி, திமுக அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமித்ததில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு ஊழல்: அமலாக்கத்துறை பகீர் தகவல்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் துறையில் 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமித்ததில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த ஊழல் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமலாக்கத்துறை சோதனையும், சிக்கிய ஆவணங்களும்!

கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போதுதான், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடந்த ஊழல் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரூ.35 லட்சம் வரை லஞ்சம்?

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த லஞ்சப் பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. ஊழல் எப்படி செய்யப்பட்டது, இதில் மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் அமலாக்கத்துறை காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

பாமகவின் முன்கூட்டியே எச்சரிக்கை

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த இந்த உண்மைகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனெனில், லஞ்சம் வாங்குவதற்காகவே இந்த ஆள்தேர்வு முறை திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது என்பதை பாமக 2023-ஆம் ஆண்டிலேயே அம்பலப்படுத்தியிருந்தது.

‘உள்ளாட்சிகளில் ஊழல்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்!’

‘உள்ளாட்சிகளில் 2534 பணிகளை நேரடியாக நிரப்புவது ஊழலுக்கே வழிவகுக்கும்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்!’ என்ற தலைப்பில் 16.11.2023 அன்று பாமக வெளியிட்ட அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தது. இனிவரும் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், அதற்கான சட்டமும் 2021 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை அவர்களே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது, ஊழல்கள் நடைபெறலாம் என்பதால், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு டி.என்.பி.எஸ்.சி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருந்தால், அதன் நோக்கம் ஊழல் செய்வதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? என்று பாமக கேள்வி எழுப்பியிருந்தது. இப்போது பாமகவின் குற்றச்சாட்டு உண்மையாகிவிட்டது.

நேர்காணல் முறைகேடு குறித்த ஐயம்

இதே பிரச்சினை தொடர்பாக பிப்ரவரி மாதம் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அதைவிட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத்தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் எழுவதாகக் கூறியிருந்தார். சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும் மீண்டும் அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் நியமனத்தில் திமுக அரசு திட்டமிட்டு ஊழல் செய்திருக்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை .

ரூ.888 கோடிக்கு மேல் ஊழல்?

ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து ரூ.888.30 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இன்னும் 50 ஆயிரம் பேருக்கு கூட நிரந்தர வேலை வழங்கவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணி நியமனங்களில் கூட ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தான் பொருள்.

ஊழல் நிறைந்த ஆட்சி

தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு லஞ்சம் வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.

சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர், தமிழகத்தை அதிர வைக்கும் இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

ரூ.35 லட்சம் லஞ்சம்

2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன. திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார்.

அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகத் துறைக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுவே மோசடிக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்கப்படுவதையும், தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.

எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரசு பணி வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி! நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்