மதுரை: சொத்து வரி கட்டாத வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு நகராட்சி மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக சீல் வைக்க சட்டத்தில் இடமில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் அரசின் மிரட்டல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
சொத்து வரி செலுத்ததற்காக நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்க குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றங்களை நாடி அரதன் மூலமே சொத்து வரியை வசூல் செய்ய முடியும், தன்னிச்சையாக சீல் வைக்க மாநகராட்சிகளுக்கு சட்டத்தில் உரிமை கிடையாது என்று கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்றம், மதுரையில் சொத்து வரி கட்டாததால் சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் சீலை உடனே அகற்ற உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த, பழனியப்பன் என்பவர் நிறுவனத்துக்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சட்டத்தை மீறி சீல் வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்து நிறுவனம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், “எங்களுக்கு சொந்தமான பெயின்ட் நிறுவனம் ஒன்றை மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. 2023 நிதியாண்டு வரை எங்கள் நிறுவனத்திற்கான சொத்து வரி மதுரை மாநகராட்சியில் செலுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சீட் கொண்ட தற்காலிக கட்டுமானத்திற்கும், சென்ற நிதி ஆண்டிற்கும் தற்போதைய நிதியாண்டிற்கும் சேர்த்து ரூ.20 இலட்சம் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு எங்களது நிறுவனம் தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாமல் மதுரை மாநகராட்சி யின் கிழக்கு மண்டல உதவி ஆணையர் நவம்பர் 6 காலை 7 மணிக்கு வந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து விட்டு சென்று விட்டார்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. மாநகராட்சியின் நடவடிக்கையை தடை செய்து எங்கள் நிறுவனத்தின் சீலை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரணை மற்கொண்டார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், “சொத்து வரி செலுத்தவில்லை என்பதற்காக நிறுவனங்களை பூட்டி சீல் வைக்க மாநகராட்சிக்கு உரிமை கிடையாது. இது சட்டவிரோத செயல், எனவே உடனடியாக சீல் அகற்ற உத்தரவிட வேண்டும்,”என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, “தமிழ்நாடு நகர்ப்புற சட்டத்தில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பின், குற்றவியல் அல்லது உரிமையியல் நீதிமன்றம் மூலமே சொத்து வரியை வசூல் செய்ய முடியும் இவ்வாறுதான் சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க மதுரை மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. எனவே மாநகராட்சியின் அத்துமீறிய நடவடிக்கை சரியில்லை,” என அதிருப்தியை பதிவு செய்தார்.
மேலும் மாலை 6 மணிக்குள் வைக்கப்பட்ட சீலை அகற்றிட உத்தரவிட்டு, மனுதாரரை சொத்து வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சென்று உரிய தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.