சென்னை:
சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை துல்லியமாக மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக ஐ.சி.எம்.ஆர் அனுமதியுடன் 12 அரசு ஆய்வகங்கள் மற்றும் 23 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 35 ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன.

அந்த தனியார் ஆய்வக பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதில், தனியார் மையங்களில் சோதனைக்கு வருபவர்களின் பெயர், பாலினம், முகவரி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விபரம் உள்ளிட்ட முழு விபரங்களையும் அவசியம் சேகரித்து, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் தொற்று பாதித்த நபர்களை எளிதாக கண்டறிந்து தனிமைப் படுத்த முடியும் என ஆணையர் தெரிவித்தார்.

மேலும், பரிசோதனைகளை துல்லியமாக மேற்கொண்டு, முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மையங்களில் பணி புரியும் அனைவரும் தொழில்நுட்ப தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

பரிசோதனை மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும், வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை மையங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.