டில்லி

பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் பிரபல நிதி நிறுவன அதிகாரிகள் நிலேஷ் ஷா மற்றும் நீலகாந்த் மிஸ்ரா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை அளிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவின் தற்போதைய தலைவர் பிபெக் துப்ராய் கடந்த மாதம் மேலும் இரு வருடங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.  அப்போது இந்தக் குழு மாற்றி  அமைக்கப்பட்டது. அதையொட்டி பல புதிய உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் நேற்று கோடாக் மகேந்திரா நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா மற்றும் இந்தியா ஸ்டிராடஜிஸ்ட் நிர்வாக இயக்குநர் நீல்காந்த் மிஸ்ரா ஆகிய இருவரும் பகுதி நேர ஆலோசகர்களாக இரு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.   இவர்களைத் தவிர மூன்றாவதாக நிதி மேலாண்மை கல்விநிறுவன தலைவர் அனந்த நாகேஸ்வரனும் இணைக்கப்பட உள்ளார்.

தற்போதுள்ள பொருளாதார சரிவு நிலையில் அரசு வங்கிக் கடன் வளர்ச்சிக்காக வட்டிக் குறைப்பு, வாகன விற்பனை முன்னேற்ற நடவடிக்கைகள், உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   இந்நிலையில் கார்பரேட் நிறுவன அதிகாரிகளை ஆலோசகர்களாக நியமித்தது அரசு எடுத்த நல்ல முடிவு என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.