சென்னை:

மூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், அங்கு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அங்குள்ள பூ மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது.  அங்கு இதுவரை  570 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 660 தெருக்கள் மூடப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் தேவையைக் கருதி கோயம்பேடு சந்தையை பல கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், மக்கள் ஏராளமாக குவிந்தது காய்கறிகளை வாங்கிச் செல்கன்றனர். அவர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியும் பலர் அதை கண்டுகொள்ளாமல் நடந்து கொள்வதால், அங்குள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவி உள்ளது.

நேற்று கோயம்பேடு சந்தை வியாபாரிகள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கு பூ வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையை மூடுவது குறித்து தமிழக காவல்துறை ஆணையர் உள்பட சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று வணிகர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இன்னொருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், சந்தை மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..