பெய்ஜிங் :
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகை அச்சுறுத்த தொடங்கியதில் இருந்து சீனாவில் கடந்த இரண்டு மாதமாக தனது வாலை சுருட்டிக்கொண்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது, சீன அரசுக்கு கவலையளிப்பதாக உள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீன் மார்க்கெட்டில் பணிபுரிவோர் உள்ளிட்ட 6 பேருக்கு புதிதாக இன்று கொரோனா வைரஸ் உறுதியானதைத் தொடர்ந்து பெய்ஜிங் நகரில் உள்ள பல்வேறு சந்தைகளை மூடியுள்ளனர்.
இந்த புதிய பாதிப்புகளை தொடர்ந்து பெய்ஜிங்கில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், சீனாவின் பிற பகுதியில் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, நாடு முழுக்க மொத்தம் 18 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தெரிவித்துள்ளது.
ஷின்ஃபாடி மீன் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் மீன்களை வெட்டும் இடத்தில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதால், போர் கால அடிப்படையில் இதனை சமாளிக்க தயாராக இருக்கும்படி பெய்ஜிங் நகரின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கை கி கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ‘குளோபல் டைம்ஸ்’ இந்த தொற்று நோய் முற்றிலும் ஒழிக்கப்படாத வரையில் அவ்வப்போது இதுபோல் தோன்றுவது சாதாரணமானது என்று சீனாவின் சுகாதார நிபுணர்கள் கூறுவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நன்கு அறிந்திருப்பதால் மீண்டும் தொற்றுநோய் பரவ வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறது.
கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கி இருப்பதை தொடர்ந்து ஷின்ஃபாடி சந்தை மற்றும் ஜிங்ஷென் கடல் உணவு சந்தையை பெய்ஜிங் உடனடியாக மூடியது. மொத்தத்தில், பெய்ஜிங்கில் உள்ள ஆறு மொத்த சந்தைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூட உத்தரவிட்டிருக்கிறது.
இதுவரை, சீனாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,075 ஐ எட்டியுள்ளது, இதில் 74 நோயாளிகள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும், யாருடைய நிலையும் மோசமாக இல்லை. 78,367 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும், 4,634 பேர் இந்த நோயால் இறந்துள்ளதாகவும் என்.எச்.சி தெரிவித்துள்ளது.