டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,45,380 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 146 அதிகரித்துள்ளது. 6535 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 80722 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 60490 குணம் பெற்றுள்ளனர். இதுவரை 41.61 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியானவர்களில் வெளிநாட்டினரும் உள்ளனர். திங்கட்கிழமை காலை முதல் பலியான 146 பேரில் 60 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். குஜராத்தில் 30 பேர், டெல்லியில் 15 பேர், மத்திய பிரதேசத்தில் 10, தமிழகத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 பேர், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 4 பேர், தெலுங்கானாவிலிருந்து 3 பேர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா 2 பேர் மற்றும் கர்நாடகா, கேரளாவில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.