சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை அதிகரித்து வருசிறது. நேற்று முன்தினம் 234 ஆக இருந்த எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, 309 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று சென்னையில் மட்டும் மேலும் 44 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் தமிழகத்தில் மொத்தம் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து இன்றைய (03.04.2020) புள்ளி விவரம்:
இதுவரை ஸ்கிரீன் டெஸ்ட் செய்யப்பட்டவர்கள் : 2,10,538
தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள்: 23,689
வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டது: 3,396
தற்போதைய சேர்க்கை: 1,580
சோதிக்கப்பட்ட மாதிரிகள்: 3,684
(நெகடிவ்: 2789, பாசிடிவ்: 411 (வெளியேற்றப்பட்டது: 7), சோதனையில் இருப்பது: 484)
தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் 1,103 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்களில் சோதனை செய்யப்பட்டவர்களில், இதுவரை 264 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது வரை 17 இடங்களில் கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. இந்த வாரத்திற்குள் கூடுதலாக 6 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். நம்மிடம் 12 ஆயிரம் சோதனை கருவிகள் இருக்கிறது. அதனால் கொரோனா சோதனையில் எந்தவித தடங்கலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மக்களிடையே, கொரோனா குறித்த விழிப்புணவை மத்திய மாநில அரசுகளும், சமூக அமைப்புகளும் அறிவுறுத்தி வந்தாலும், அதை ஏற்கா மக்களின் மனநிலை, சமூக விலகல் கடைபிடிக்கத் தவறுதல், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சரியான முறையில் நோய் தொற்று குறித்து தெரிவிக்காத காரணங்களினாலும், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
விழித்திரு – விலகி இரு – வீட்டிலேயே இரு… கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில் இருந்து நம்மை பாதுகாப்போம்…