டெல்லி: இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 200 நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோரை இந்த வைரஸ் பாதித்து இருக்கிறது.

இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக சர்வதேச சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று கூறி உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபாரோ கூறி இருப்பதாவது: இது ஒரு நோயாகும், அதிலிருந்து நாம் விரைவில் மீண்டு எழுவோம். மேலும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்துக்காட்டாக இருந்து வழிநடத்தியது. கொரோனா விழிப்புணர்வு பற்றி அனைத்து மட்டங்களிலும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் குறிப்பாக பஞ்சாயத்துகள் வரை மிக சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளது என்றார்.

21 நாட்கள் ஊரடங்கு போதுமா? மேலும் நீட்டிக்கப்படுமா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா மையப்புள்ளி, அதன் தாக்கம் எந்த பகுதிகளில் அதிகம் பரவி இருக்கிறது என்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதை அணுக வேண்டும்.

ஊரடங்கினால் மக்கள் சிரமப்படுகின்றனர். அவர்கள் வலியுடன் இருக்கின்றனர். ஆனால் எது நல்லதோ அதை தான் அரசாங்கம் செய்ய வேண்டும். வேகம் ரொம்ப முக்கியம் என்றார்.

வைரஸ் பற்றிய தகவலை சீனா மறைத்ததாக எழுந்த விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கான நேரம் இதுவல்ல என்றார். வரலாறு திரும்ப எழுதப்படும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எவ்வளவு விரைவாக எதிர்வினை ஆற்றினோம் என்பதன் அடிப்படையில் அது  தீர்மானிக்கப்படும். எல்லா உலகத் தலைவர்களுக்கும் ஒரே விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இது நாம் அனைவரும் பழி சுமந்து, இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராகப் போராட வேண்டிய நேரம் என்றார்.