பீஜீங்:

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகிய நிலையில், இன்று அந்நாடு துக்க தினம் அனுசரித்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக இன்று காலை  சீனாவில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு    3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஷிஜிங்க்பிங் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர்.

சீனாவில் கொரோனா குறித்து உலகிற்கு  முதல்முதலாக தகவல் தெரிவித்த  மருத்துவர் லீ வென்லியாங்க் உயிரிழந்த நிலையில், அவரது புகைப்படம் பல இடங்களில் வைக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஷோங்கன்காய் (Zhongnanhai) என்ற இடத்தில் நடந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் ஷிஜிங்க்பிங் பங்கேற்றார். அப்போது அந்நாட்டு கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.