நியூயார்க்: அமெரிக்காவின் வர்த்தக தலைநகரம் என்றும், உலக மாட மாளிகைகளின் நகரம் என்றும் அழைக்கப்படும் நியூயார்க் நகரம், கொரோனா வைரஸ் தாண்டவம் காரணமாக வெறிச்சோடி போயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் என்பது உலக வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு அடையாளம். ஆனால், அந்த நகரம் தற்போதைய நிலையில் அமெரிக்காவின் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாகவும் மாறியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு 2.77 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், 7,392 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

86 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட நியூயார்க் நகரம், அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், நான்கில் ஒரு பகுதியினரைக் கொண்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், கடைகள், சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடக்கின்றன. வெறிச்சோடிய நியூயார்க்கின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.