திருவனந்தபுரம்:
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவி வருகிறது. கேரளாவில் கோரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதை கேரள அமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார்.
சீனாவின் வுகான் பகுதியில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வரகிறது. இதுவரை சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டிய நிலையில், சுமார் 20ஆயிரம் பேர் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், 14 ஆயிரத்து 380 பேருக்கு கரோனா தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உள்பட உலகின் 22 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு வசித்து வந்த இந்தியவர்கள் ஏராளமானோர் தாயகம் திரும்ப உள்ளனர். மேலும், அரசு சார்பிலும் 2 தனி விமானம் அனுப்பப்பட்டு அங்கிருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். சீனாவில் உள்ள பிற நாட்டவர்களுக்கு இ விசா பெறும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில், கேரளாவில் 3-வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வுகானில் இருந்து திரும்பிய கேரள மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில், தற்போது 3வதாக ஒரு நபரும் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், இவரும் வுகான் பகுதியில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பியவர் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கஞ்சன்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.