கோவையில் போலீசாருடன் கைகோர்த்த தன்னார்வலருக்கு கொரோனா: 40 போலீசாருக்கு பரிசோதனை

Must read

கோவை: கோவையில் துடியலூர் காவல் நிலைய போலீசார் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

கோவை வடமதுரை கோத்தாரி நகரை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். துடியலூர் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பது உட்பட பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளார்.

முன்னதாக அந்த 61 வயது நபர் மார்ச் 23 ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அவருக்கு இரு முறை சோதனை செய்யப்பட்ட போது நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால், நேற்று முன் தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து துடியலூர் காவல் துறையினருக்கு சோதனை நடத்தப்படுகின்றது. மேலும் 61 வயது தன்னார்வலரின் உறவினர், நண்பர்களுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றது.

61 வயது தன்னார்வலர் துடியலூர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்திருப்பது சுகாதார துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

More articles

Latest article