நீலகிரி: கொரோனா தொற்றால் மாணாக்கர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறிய உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்து விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செப்டம்பர் 1ந்தேதி உயர்நிலை வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்கள் வருகை இல்லை. இதற்கிடையில், சில மாவட்டங்களில் சில மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், ஊட்டி வந்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் சவுமியா சுவாமிநாதன், கொரோனா தொற்றால் மாணாக்கர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும், அவர், அங்கு மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார். அங்கு மக்களை சந்தித்து சுகாதாரம், குழந்தைகளின் கல்வி நிலை, கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியவர், அங்குள்ள மக்களிடம், குழந்தைகளை கண்டிப்பாக படிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது என்றார்.