துபாய்: கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க, செயற்கைப் பொருளைப் பயன்படுத்த அனுமதி தரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்துக்கும் காரணம் கொரோனாதான். முன்பு, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பொருட்டு, அதைப் பளபளப்பாக்க, எச்சில் அல்லது வியர்வையைப் பயன்படுத்தலாம் என்ற விதியை வைத்திருந்தது ஐசிசி.

ஆனால், அந்த விதியை மீறி, பந்தைப் பளபளப்பாக்க செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்திய பல வீரர்கள் தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். வக்கார் யூனிஸ், டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் போன்றோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆனால், தற்போதைய கொரோனா உலகில் அனைத்தும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றும் என்பதால். எச்சில் போன்ற முந்தைய அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாம்.

அதற்கு பதிலாக, வேறொரு செயற்கையானப் பொருளைப் பந்தின் மீது தேய்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படலாம். ஐசிசி புதிய விதிமுறைகளில் இது சேர்க்கப்படலாம். அதாவது, மெழுகு அல்லது ஷு பாலிஷ் போன்றவைகளை நடுவர் முன்னிலையில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்து விரைவில் நடக்கவுள்ள ஐசிசி கிரிக்கெட் கமிட்டிக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.