சென்னை:

கோரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 78 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசின் சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

இவர்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த விமல் என்பவருக்கு நோய் தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும்,  கிருஷ்ணகிரியைச் சேர்ந்த  மாணவர்கள் உள்பட அனைவரும்  20 நாட்கள்  கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி வைரசான  கோரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது.  இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும், சீனாவில் இருந்து வரும்  பயணிகளுக்கு தீவிர மருத்துவசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமானோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் கடந்த 20ம் தேதி நள்ளிரவில் இருந்து மத்திய சுகாதாரத் துறை 3 சிறப்பு கவுன்டர்களை அமைத்து பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். சீனா உட்பட 7 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இங்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதுவரை சென்னை விமான நிலையத்தில் 15,000 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும், சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 தமிழகர்கள் உள்பட 10 சீனர்கள் என 78 பேர் பரிசோதிக்கப் பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  இவர்களில் நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும்  68 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனோ தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவரும் 20 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் குழந்தைசாமி தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சீனாவிலிருந்து நாடு திரும்புவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்து உள்ளது.