சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி  போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள தமிழகஅரசு,  நாளை (தமிழ்ப்புத்தாண்டு /  ஏப்ரல் 14 முதல்)   தடுப்பூசி திருவிழா நடத்தப்பட இருப்பாதாகவும்,  அப்போது சுமார்  லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக  சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி அறிவுறுத்தியபடி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை இன்னும் மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே 4 நாட்கள் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல மாநிலங்களில் 11ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா  நடைபெறுகிறது. அப்போது தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தமிழகஅரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போதைய நிலையில், தினசரி குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.  இதில் 3797 மையங்களில் கோவிட் ஷீல்டு தடுப்பூசியும்,  கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதே எண்ணிக்கையில் தான் இனியும் மையங்கள் செயல்படும்.

இந்த மையங்கள் தவிர மேலும் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் தமிழகஅரசு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி,  அதிக நபர்களுடன் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை தேவைக்கேற்ப நடத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விருப்பமுடைய நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளாட்சித்துறை மற்றும் அப்பகுதி நகர் நல அலுவலர்கள் மூலமாக இதற்கான கோரிக்கைகளை முன்னெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முகாம்கள் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது.