பெங்களூரு

னியார் மற்றும் அரசுய் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.    தற்போது கொரோனா மிக அதிகமாக அதிகரித்து வரும் மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்றாகும்.   அகில இந்திய அளவில் கர்நாடகா பாதிப்பில் 3ஆம் இடத்தில் உள்ளது.

இதையொட்டி மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, காலாபுராகி, பிதார், தும்கூரு, உடுப்பி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.    இதில் பெங்களூரு நகரில் மட்டும் தினசரி பாதிப்பு 6 ஆயிரம் வரை உள்ளது.   இதையொட்டி பெங்களூரு மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெங்களூரு நகர தலைமைச் செயலர் ரவிகுமார், முக்கிய செயலர் துஷார் கிரிநாத், மண்டல ஆணையர்கள் துளசி மட்டினேனி, ரவீந்திரா, மனோஜ் ஜெயின், ராஜேந்திர சோழன், சங்கர பாபு ரெட்டி, ரந்தீப், பசவராஜ், உள்ளிட்டோர் மற்றும் அனைத்து சுகாதார அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர்.

இந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள், “கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது.  அதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  மேலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக மட்டும் தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகளை ஒதுக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.