நியூயார்க்: கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகளை இடைநிறுத்தம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட தள்ளுபடி திட்டத்தை ஆதரிக்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, உலகின் 170க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் நோபல் பரிசு வென்றவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய அளவில் தடுப்பு மருந்து செலுத்தும் அளவை அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள், இந்த முன்மொழிவை, உலக வர்த்தக மையத்தில், வரும் அக்டோபர் மாதம் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வர்த்தக மையத்தின் தள்ளுபடியானது, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், தடுப்பு மருந்து மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்பங்கள், சர்வதேச அளவில் மிகவும் வெளிப்படையாகவும் எளிதாகவும் பகிரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பு மருந்து பற்றாக்குறையால், ஏழை நாடுகளிலுள்ள சாமானிய மக்களில், 10க்கு 9 பேர், இந்தாண்டை தடுப்பு மருந்து இல்லாமலேயே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உலகின் ஏழை நாடுகள், வரும் 2024ம் ஆண்டுவரை, தன்னுடைய பெரும்பான்மை மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கு காத்திருக்க வேண்டும். எனவேதான் இந்த தள்ளுபடி முன்மொழிவு முயற்சி என்று கூறப்பட்டுள்ளது.