புதுச்சேரி:  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில்,  அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதலில் தடுப்பூசி போடுங்கள் என பிரதமர்  மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியாவில் வரும் 6ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு செலுத்த மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்தே, மற்றவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, தடுப்பூசிகளுக்கு அமைச்சர்கள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும் போது அரசியல் வாதிகள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.

இதையடுத்து,  புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,   மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் கூறியுள்ளார் . மேலும் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.