சென்னை
ஒமிக்ரான் வைரசால் ஏற்படும் உயிரிழப்பை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் தடுக்க முடியும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 5,79,91,000 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளனர். கடந்த 30 ஆம் தேதிவரை 4,54,89,382 பேர் முதல் டோஸும் 2,56,13,525 பேர் இரண்டாம் டோஸும் தடுப்பூசிகள் போட்டு கொண்டுள்ளனர்.
தற்போது 1,24,01,618 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் போட்டு கொள்ளவில்லை. அதைப் போல் 80,50,574 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் உயிரிழப்பைத் தடுக்க முடியும் எனவே இந்த பாதிப்பில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காக்க அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.