நாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…

Must read

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கு நாளை முதல்கட்டமாக தடுப்பூசிகள் போடும் பணி தொடங்குகிறது.

தமிழகத்திலும் 10 மண்டலங்களைச் சேர்ந்த 166 மையங்களில் நாளை தடுப்பூசி போடுவதற்கான பணிகள் ஆயத்தமாக உள்ளன.  ஏற்கனவே தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை பயனர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

பிரதமர் மோடி நாளை காலை 10.30 மணியளவில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

இதையடுத்து,  மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்காக   புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கும்,  5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. அதுபோல,  தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக  வந்துள்ளது.

தடுப்பூசிகள்  சென்னையில் குளிர்சாதன அறையில் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்  திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கொரோனா தடுப்பூசி மருந்து நாளை முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 166 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும்.

முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும். இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.  தடுப்பூசிகள் 2 முறை போடப்பட வேண்டும். முதல் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அடுத்த  28 நாட்கள் இடைவெளியில் அடுத்த டோஸ் போடப்படும். ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படும். வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article