டில்லி

டுப்பூசி போட்டு கொண்டவர்கள் உள்நாட்டில் பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை தேவை இல்லை என அறிவிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

இரண்டாம் அலை தாக்குதலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  இதைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  அதில் ஒன்றாக கொரோனா அதிகம் உள்ள மாநிலத்தில் இருந்து உள்நாட்டில் மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்ய கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  மத்திய அரசு ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதித்துள்ளதால் பல மாநிலங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இவ்வாறு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களால் கொரோனா பரவாது என கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய விமான பயணத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது அவர், ”இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களைச் சோதனை இன்றி உள்நாட்டில் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து அனைத்து அமைச்சரக பிரதிநிதிகள்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோருடன்  ஆலோசனை நடந்து வருகிறது.

அதே வேளையில் மக்கள் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளது.  எனவே உள்நாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவை என முடிவு எடுப்பது மாநில அரசுகளின் முடிவைப் பொறுத்ததாகும்.  வெளிநாடுகளில் உள்ளது போல் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.