வாஷிங்டன்
இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மருந்தை ஏற்றுமதி செய்யாவிடில் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டினார். தற்போது இந்தியா இந்த மருந்துக்கு ஏற்றுமதி தடையை விலக்கி உள்ளது. அடுத்ததாக தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி அன்று சீன புத்தாண்டை கொண்டாடிய சீனர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் அமெரிக்காவுக்கு திரும்பினர். அதன் பிறகு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது கொரோனா குறித்த எவ்வித எச்சரிக்கையையும் உலக சுகாதார அமைப்பு வெளியிடாமல் இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “உலக சுகாதார அமைப்பு சீனாவின் சார்பாக நடந்துக் கொள்கிறது. ஏற்கனவே அவர்களுக்கு கொரோனா குறித்துத் தெரிந்த போதிலும் சீனாவுக்குப் பயணம் செய்ய அவர்கள் தடை விதிக்கவில்லை. இது குறித்து அமெரிக்கா தெரிவித்த ஆலோசனைகளை அவர்கள் ஏன் ஏற்காமல் இருந்தனர்?
உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தான் அதிக அளவில் நிதி உதவி அளிக்கிறது. ஆயினும் பயணத் தடை குறித்த எங்கள் ஆலோசனைகளை ஏற்கவில்லை. அவர்கள் ஏன் ஏற்கவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். அத்துடன் நாங்கள் சொல்வதை கேட்காத இந்த அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்த உத்தேசித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.