டெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏற்கனவே பல்வேறு நாட்டினர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ‘அனைத்து அமைச்சகங்களும், மாநில அரசுகளும், பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா பற்றி பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.  பொதுமக்களும் முக்கியமில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டினர் மூலமாக நோய் பரவுவதால், சீனா, தென் கொரியா, அமெரிக்கா உள்பட 15 நாட்டினருக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியா வர தடை விதிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்த நாடுகளில் இருந்து எந்த ஒரு விமானமும் இந்தியாவிற்கு வராது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது