சென்னை: கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளதால், அங்கிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொரோனா 3வது பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்ச அளவு பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டு வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு 20ஆயிரத்தை கடந்துள்ளது. இது நாட்டின் மொத்த தினசரி பாதிப்பு 50 சதவிகிதம் அளவில் உள்ளது. தமிழகத்திலும் சென்னை, கோவை பகுதிகளில் தொற்று பாதிப்பு சற்று தீவிரமாகவே உள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் ஓரிரு நாட்களில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் 13 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறியதுடன், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாகவே காரணம் என்று கூறியதுடன்,
இனிமேல், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும் என்றும், அவர்களில் 14 நாட்களுக்கு முன்பு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடவடிக்கை வரும் 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும், தமிழகத்திற்குள் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயம் என, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார்.