புதுச்சேரி:
புதுச்சேரியில் மதுபானங்கள் மீது விதிக்கப்பட்ட கொரோனா வரியை கலால் துறை நீக்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலானது.
இரண்டு மாதங்களுக்கு பின் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து, புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 25ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.
மற்ற மாநிலங்களைவிட, புதுச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவு. இதனால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மதுப் பிரியர்கள் புதுச்சேரிக்கு வருவர்.இதனால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறி, மதுபானங்கள் மீது கொரோனா வரியை புதுச்சேரி அரசு விதித்ததால் விலை தாறுமாறாக உயர்ந்தது.
அதாவது, புதுச்சேரியில் 920 வகையான மதுபானங்கள் விற்கப்படுகிறது. இவற்றில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கிடைக்கும் 154 வகை மதுபானங்கள் மீது கொரோனா வரி விதித்து தமிழகத்துக்கு இணையாக விலை உயர்த்தப்பட்டது.
புதுச்சேரியில் மட்டும் விற்கும் 766 வகை மதுபானங்களுக்கு 25 சதவீதம் அளவிற்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது.ஆரம்பத்தில், 3 மாதங்களுக்கு மட்டும் கொரோனா வரி அமலில் இருக்கும் என அறிவித்தனர்.ஆனால், 3 முறை நீடிக்கப்பட்டு, கடந்த 31ம் தேதி வரை மதுபானங்கள் மீதான கொரோனா வரி அமலில் இருந்தது.
இதற்கிடையில், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.இந்நிலையில், புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை நேற்று முன்தினம் 7ம் தேதியுடன் கலால் துறை ரத்து செய்துள்ளது.
இதையடுத்து, கொரோனா வரி விதிப்புக்கு முன், கடந்தாண்டு விற்கப்பட்ட பழைய விலைக்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது.