விழுப்புரம்:
விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், கொரோனா அறிகுறி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற தப்லிஜி சுமாத் மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாநாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 64 பேர் கலந்துகொண்ட நிலையில், 55 பேர் அடையாளம் காணப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
25 பேர் விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், 30 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.