வீடு வீடாக கொரோனா கணக்கெடுப்பு பணி: ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் தமிழகஅரசு…

Must read

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துள்ளது வெட்டவெளிச்சமான நிலையில், சென்னையில் பரவி வரும் கொரோனாவை தடுக்க, ஆசிரியர்களை களமிறக்குகிறது சென்னை மாநகராட்சி. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு விவகாரத்தில் கோட்டை விட்ட தமிழகஅரசு, அதன் காரணமாகவே சென்னையில் இந்தளவுக்கு கொரோனா உச்சமடைய காரணமாக இருந்தது. அதுபோல லாக்டவுன் காலத்திலும், ஊரங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதாலும், தேவையின்றி தளர்வுகளை அறிவித்து மக்கள் கூடுவதற்கு வாய்ப்பளித்ததாலுமே சென்னையில் கொரோனா தொற்று கணக்கிலடங்கா அளவில் பரவி வருகிறது.

பெரும்பாலான பகுதிகளில் இதுவரை எந்தவொரு மாநகராட்சி அதிகாரியோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ, மருத்துவர்களோ நேரடி கள ஆய்வுக்கு செல்லாத நிலையில், தற்காலிக பணியாளர்களைக் கொண்டே கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருவதாக மக்களிடையே  ‘ஷோ’ காட்டி வருகிறது.

லாக்டவுனின்போது அவசர சிகிச்சையா: மருத்துவர்கள் கூறுவது என்ன?

தமிழகஅரசின் இதுபோன்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாகவே சென்னையில் நோய்த்தோற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது.

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி ஆணையருடன் சிறப்பு அதிகாரியாக ஜெ.ராதாகிருஷ்ணனை நியமித்த தமிழகஅரசு, மீண்டும் 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக 15ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் நியமித்தது. ஆனால், இவர்கள் யாரும் களத்திற்கு செல்லாத நிலையில், பின்னர் 5 அமைச்சர்களை களமிறக்கியது. இவர்களும் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு கட்சி தொண்டர்களுடன் புடைசூழ ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று, பணியில் தீவிரமக ஈடுபடுவதுபோல படம் எடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

ஏற்கனவே பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 726 அலுவலர்கள் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

இதுமட்டுமின்றி,  80, 108ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத் துறையின் 33 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 30 ஆர்பிஎஸ்கே. வாகனங்கள், 20 ஜெஎஸ்எஸ்கே. வாகனங்கள் உட்பட 173 வாகனங்கள்  சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. (இவை அனைத்தும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தவைகள் மட்டுமே)

இதுமட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று (14/05/2020) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 42687 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக, சென்னையில்30,444  ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும்,நேற்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டுமே 22 பேர் உயிரிழந்த நிலையில் சென்னையில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 1ந்தேதி முதல் 13ந்தேதி வரை (13 நாட்களில்) சென்னையில் 224 பேர் பலியாகி உள்ளனர்.(அதிகாரப்பூர்வ தகவல்படி) இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கை அமல்படுத்துவதில் எடப்பாடி அரசு தோல்வி… தேர்தல் பயமா…?

சென்னையில்  கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள  தளர்வுகளை அகற்றி மீண்டும் பூட்டுதலை தீவிரமாக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும், ஏன் சென்னை உயர்நீதிமன்றம் கூட ஆர்வம் காட்டிய நிலையில், தளர்வுகளை அகற்றி லாக்டவுனை கடுமையாக்க முடியாது என்று தமிழகஅரசு திட்டவட்டமாக கூறி உள்ளது.

தனது நிலையில் பிடிவாதமாக இருக்கும் தமிழகஅரசு, அதே வேளையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பிடிவாதமாக இருந்தால் வரவேற்கலாம்… ஆனால், கொரோனா விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து தடுமாறி வருவது, அதன் நடவடிக்கையில் இருந்து தெளிவாகி வருகிறது.

இதுவரை, சுகாதாரத்துறை அதிகாரிகளோ, உயர் அதிகாரிகளோ களத்திற்குள் வந்து பணியாற்ற முன்வராத நிலையில், தற்போது ‘மைக்ரோ திட்டம்’ என்ற பெயரில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை களமிறக்க முன்வந்துள்ளது.

ஆசிரியர்களை வீடு வீடாக சென்று, கணக்கெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர், யார் யாருக்கு என்ன நோய், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்ற விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு சென்னையில் மட்டும் 11,500 ஆசிரியர்களை களமிறக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  நாளை முதல் சென்னையில் வீடுவீடாக  கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பாதுகாப்பு கவசங்களுடன் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களே களத்திற்கு செல்லப் பயப்படும் நிலையில், எந்த வசதியும்,  பாதுகாப்பு கவசமும் இல்லாத அப்பாவி ஆசிரியர்களை தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் களமிறக்குவது, ஆட்சியாளர்களின் கொடூரமான மனநிலையை காட்டுகிறது.

கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க அறிவு றுத்தும் மத்திய, மாநில அரசுகள், வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிக்கு எப்படி ஆசிரியர்களை நியமித்துள்ளது எந்த வகையில் நியாயம். அவர்கள் சமூக விலகலை கடைபிடித்து, எப்படி வீடுவீடாக சென்று கொரோனா கணக்கெடுப்பு பணி நடத்த முடியும்.

மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் ஒரே குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பது என்பது சாத்தியமற்றதே. அப்பாவி ஆசிரியர்களை களமிறக்கும் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நாளுக்கு நாள் உயிர்பலிகள் அதிகரித்து வரும் இந்த வேளையில்,    சுமார் 11ஆயிரத்து 500 ஆசிரியர்களின் உயிரோடு தமிழகஅரசு விளையாடி வருகிறது. ஆசிரியர்களை களமிறக்கி அவர்களின் உயிரை காவு வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதா?

உயிர் பயம் அனைவருக்கும் இருக்கும்தானே… அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் களத்திற்கு வராத நிலையில் ஆசிரியர்களை களமிறக்குவது ஏனோ? அபாயத்தில் ஆசிரியர் சமுதாயம் தத்தளித்து வருகிறது…

ஆசிரியர்கள்  ஒன்றும்  அமிர்தம் உண்ட தேவர்கள் இல்லையே….

சிந்திக்குமா தமிழகஅரசு…

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article