டில்லி

மே மாத இறுதியில் கொரோனாவின் தாக்கம் குறையும் என பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது.   தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது.  இதுவரை 2.10 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 2.30 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1.72 கோடி பேர் பாதிக்கப்பட்டு தற்போது சுமார் 36 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  எனவே நாடெங்கும் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய பெண் பத்திரிகையாளர்களுடன் பிரபல தொற்று நோய் நிபுணர் ககன்தீப் காங் ஒரு காணொளி சந்திப்பில் கலந்து கொண்டார்.   அப்போது அவர், “தடுப்பூசிகளைப் பொறுத்த வரை தொற்றுக்களுக்கு எதிரான தடுப்பை அதிக அளவில் வழங்குகின்றன.   நீங்கள் நோய்த் தொற்றில் இருந்து தடுக்கப்பட்டால் அந்த நோயைப் பரப்ப மாட்டீர்கள்.  எனவே தடுப்பூசிகள் என்பது அவசியமாக உள்ளது.

சென்ற முறை கொரோனா பரவலில் இருந்து தப்பிய பலர் தற்போது கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற மக்கள்  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலக அளவில் காணும் போது முன்பை விட இரண்டரை முதல் நான்கு மடங்கு அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தற்போது அதிக அளவில் பரவி மக்கள் தொகையைப் பெருமளவு குறைத்து வருகிறது.

மே மாத இறுதிக்குள் கொரோனா தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.   முழு ஊரடங்கு இந்த பரவலைக் கட்டுப்படுத்த நன்கு உதவும்.   முழு ஊரடங்கு அமலாக்குவதன் மூலம் கொரோனா பரவுதல் வெகுவாக குறையும்.   ஊரடங்கால் இன்னும் மூன்று வாரங்களில் பரவல் மிகவும் குறையும்  என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.  ஆனால் மக்கள் அதற்கு முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.