டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக அமல் படுத்தப்பட்டுவந்த பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு உச்சம் பெற்று வருகின்றன.
கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 60ஆயிரம் அளவிலேயே பாதிப்புகள் தெரிய வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் 70 ஆயிரமாக உயர்ந்து. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மேலும் பாதிப்பு அதிகரித்து வந்தது. சில தினங்களாக தினசரி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் உச்சம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும், இதுவரை இல்லாத அளவுக்கு முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 90ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் சூழலில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, உலக அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இருந்து பிரேசினை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் பாதிப்பு அபாயகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில், 90,633 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு 41,13,812 ஆக உயர்ந்துள்ளது.
கடநத் 24 மணி நேரத்தில் 1,065 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.72 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,80,865 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 73642 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 77.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,62,320 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செப்டம்பர் 5ந்தேதி வரை 4,88,31,145 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,92,654 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையோ, எப்போதும்போல, பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப் படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.