புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 126 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 314 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 33 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலையில், 510 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,130 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 598 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 493 பேர் புதுச்சேரியையும், 55 பேர் காரைக்காலையும், 43 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு என்பது 1.68 சதவீதமாகவும், குணமடைவது 93.73 சதவீதமாகவும் (சுமார் 94 சதவீதம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 29 ஆயிரத்து 907 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது அவர்களில் 2 லட்சத்து 88 ஆயிரத்து 479 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.
புதுச்சேரியில் அதிகரித்துவரும் தொற்று பாதிப்பு குறித்த ஆய்வு நடத்திய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம தசரா பண்டிகை என்றும், கொண்டாட்டத்தில் மக்கள் கூடியதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலத்தில் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தற்போதே மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த மாத இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.