கொரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது என மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின்போது தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி கூறினார்.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுடன் வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று (11=05=2020) காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அதைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் மாவட்டர்களிடையே பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பராவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
“மத்திய, மாநில அரசுகள் கூறும் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட கலெக்டர்கள் மிகச்சிறப் பான முறையில் கடைபிடித்து வருகின்றீர்கள்.
கொரோனா வைரஸ் நோயை பொறுத்தவரையில் சிறிய அளவில் பரவி, பின்னர் பெரியளவில் உயர்ந்து பின்னர் தான் படிப்படியாக குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படித்தான் பல்வேறு நாடுகளில் நடந்திருக்கின்றன. வெளிநாடுகளில் இந்நோய்த்தொற்று சிறிய அளவில் ஏற்பட்டு பின்னர் படிப்படியாக உயர்ந்து, அதன்பின்னர் தான் குறைந்துள்ளது. அதேபோல் தான் தமிழகம், இந்தியாவில் நிலைமை இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, தமிழக வல்லுநர்கள் குழு கூறும் வழிமுறை களை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய்த்தாக்கத்தைக் கட்டுப் படுத்த முடிந்தது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு மிக எளிதில் பரவுகிறது.
அரசு கூறுவதை மக்கள் பின்பற்றினால் தான் நோய்த்தொற்றைத் தடுக்க முடியும். பொதுமக்கள் ஒத்துழைப்பில்லாமல் தொற்றுப் பரவலைத் தடுப்பது சுலபமல்ல.
கொரோனா வைரஸ் பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஒலிபெருக்கிகள், ஊடகங்கள், குறும்படங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப வைரஸ் தொற்றை தடுக்க முடியும். பரவலை தடுத்து நிறுத்த முடியும். இதற்கு காவல் துறை, உள்ளாட்சி துறை ஆகியவை துணைபுரிந்து உள்ளன.
மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி சிரமமின்றி எளிதாக கிடைக்கின்றன. வெளிமாநிலத்தில் இருந்து மளிகை பொருட்கள் நம் மாநிலத்தில் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்பட்டு, நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் துணை நின்றனர். அதனால்தான் மக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைத்துள்ளன.
அதேபோன்று, ஏழை, எளிய மக்களுக்கும் ரேஷன் கடை மூலம் ரூ.1,000 வழங்கப்பட்டது. விலை யில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது. மே மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கும் இவை இலவசமாக வழங்கப்படும். 4 பேர் உள்ள குடும்பத்திற்கு 50 கிலோ அரிசி வழங்கப்படும். மற்ற பொருட்கள் 1 கிலோ வழங்கப்படும். பல மணிநேரம் ரேஷன் கடைகளில் நிற்க தேவையில்லை. தங்கு தடையின்றி அவை வழங்கப்படும். தமிழகத்தில் பசி, பஞ்சம் என்பது இல்லை.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் பட்டன. அவர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 வழங்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 7 லட்சம் பேருக்கும் ‘சமூக கிச்சன்’ மூலமாக நாள்தோறும் 2 லட்சம் பேருக்கும் உனவு வழங்கப்பட்டன.
வேளாண் பணிகளுக்கு எந்த விதிகளும் இல்லை. அதனால் அப்பணிகள் தொய்வின்றி நடக்கின்றன. 100 நாள் வேலைத்திட்டம் 3-ல் ஒரு பங்கு பணியாளர்கள் மூலம் நடத்தப்படுகிறது. நகரப்பகுதிகளைத் தவிர்த்து ஊரகப்பகுதிகளில் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உணவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள், சிறு, குறு, தொழில்கள் உள்ளிட்டவை ஊரகப்பகுதிகளில் நடக்கின்றன.
மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் வேகமாக செயல்பட்டதே காரணம். பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு ஏற்ப படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும். சில விதிமுறைகளை பின்பற்றி பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தொழில்கள், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. நோய்ப்பரவலின் காரணமாக வெளிநாட்டில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் வேறு நாட்டுக்குச் செல்கின்றன. அந்த தொழில்களை நம் மாநிலத்திற்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், செயலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் நோய்பரவல் தடுப்பில் வெற்றி கண்டிருக்கிறோம்.
நோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக சொல்கின்றனர். அதிகமாக பரிசோதனை செய்வதாலேயே அதிகமான எண்ணிக்கை இருக்கிறது. அதிகமாக பரிசோதித்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இறப்பு சதவீதம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.
சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 0.67% தான் இறப்பு விகிதம். 27% பேர் குணமடைந் திருக்கின்றனர். 53 பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. மற்ற மாநிலங்கள் இவ்வளவு பரிசோதனை செய்யவில்லை. அதனால் நோய்த்தாக்கம் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்கள். இந்நோய்த்தொற்று சற்று ஏறித்தான் இறங்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம். பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும்.
குடிமராமத்து திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும், கடந்த காலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தியதால் தான் மழைநீரை சேமித்து பயன்படுத்த முடிகிறது. டெல்டா பகுதிகளில் உள்ள பாசன கால்வாய்களும் தூர்வாரப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை: