டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த சில வாரங்களாக உச்சமடைந்து வரும் நிலையில், ஏராளமான குழந்தைகளும் தொற்றால் பாதிக்கப்பபட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் (மார்ச்) 10வயதுக்கு குறைவான 472 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவின் 2வது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில், குழந்தைகள் பாதிக்கப்படுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,20,39,644 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 291 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,61,843 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்து வருபவர்களை விட தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து வருகிறது. நேற்று 32,231 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,13,55,993 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 5,21,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் ஆயிரம் பேர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை 24 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 161 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன, இந்தியாவில் இதுவரை 6,05,30,435 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மார்ச் மாதம் மட்டும் (27 ந்தேதி வரையிலான நிலவரம்) 10 வயதிற்குட்பட்ட 472 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 472 பேரில் 244 சிறுவர்கள் மற்றும் 226 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் முகமூடிகளை அணியச் செய்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்றும் பள்ளிகள் திறப்பதும், பொது இடங்களில் மக்கள் கூடுவதே இதற்கு காரணம் என்றும், இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 40,414 பேருக்கு கொரோனா தொற்றும், 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்றும் மருத்துவர்கள், மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 27,13,875 ஆகவும், சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 3,25,901 ஆகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.