சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று மிக தீவிரமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு சுகாதாரத்துறை பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை உச்சமடைந்து, வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவில் போன்ற மதசார்ந்த திருவிழாவிற்கு தடை, திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி போன்ற பல நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை மாநகரத்தில் தொற்று பரவலை தடுக்ககூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தம் செய்யும் நடவடிக்கையை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கழகத்திடம் தமிழக சுகாதாரத்துறை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்குஅனுமதி கிடைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 150 மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னையில் தற்காலிகமாக பணியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.