டில்லி
கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் சுமார் 1 கோடி பேருக்கு மேல் பணி இழந்து 97% பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா முதல் அலை தாக்குதலால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றே தளர்வு ஏற்பட்டிருந்தது. அப்போது இரண்டாம் அலை தாக்குதலால் மீண்டும் ஊரடங்கு தொடங்கப்பட்டு பல வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் மீண்டும் மூடப்பட்டன.
இது குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய தலைமை அதிகாரி மகேஷ் வியாஸ், “இந்தியாவில் முதல் அலை கொரோனா தாக்குதலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் ஏராளமானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் கீழ் மட்ட தொழிலாளர்கள் என்பதால் இவர்கள் தங்கள் பணிகளை இழக்கும் நிலை ஏற்பட்டது,
அதிலிருந்து மீண்டும் சற்றே தளர்வுகளுடன் மீண்டும் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கின. ஆயினும் பெரும்பாலானோருக்கு மீண்டும் பணி கிடைக்கவில்லை. குறிப்பாகச் சிறப்புப் பணிகள் செய்வோருக்கு அந்த பணிகள் மீண்டும் தொடங்கப்படாததால் பணி புரிய வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாத கால கட்டத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பணி இழந்துள்ளனர்.
மீண்டும் கொரோனா குறைந்த உடன் இவர்களுக்குப் பணி கிடைக்க வாய்ப்புள்ள போதிலும் அனைவருக்கும் பணி கிடைக்காது. இதற்குக் காரணம் அனைத்து துறைகளிலும் உடனடியாக பணி தொடங்க வாய்ப்பில்லை என்பதே ஆகும். இவ்வாறு அனைத்து துறைகளிலும் பணி தொடங்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகலாம்.
சென்ற வருடம் மே மாதம் 23.5% பணி இழப்பு ஏற்பட்டு அது வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. மேலும் பலருக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 3% தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதிய இழப்பு குறைவாக இருந்துள்ளது. மீதமுள்ள 97% தொழிலாளர்கள் வருமான இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து ஏழைகள் ஆகி உள்ளனர். ” எனத் தெரிவித்துள்ளார்.