சென்னை:

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான வதந்திகளும் சமூக வலைதளங்களில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது… இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழகஅரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்..

கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் மட்டுமின்றி உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்ட வருகிறது… அதுபோல, சிக்கன் போன்ற உணவு பொருட்களின் விற்பனையும் அடியோடு முடங்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமின்றி, மருத்துவர்கள் என்ற பெயரில், கொரோனாவை தடுப்பது எப்படி, அதற்கு இந்த மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதை சாப்பிடுங்கள் என்று பல்வேறு தகவல்களும் பரிமாறப்பட்டு வருகின்றனர். இதனால் தேவையற்ற பிரச்சினைகள், பீதிகள் ஏற்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தல் கொரோனா வதந்திகளை தடுக்கும் நோக்கில்,  வாட்ஸ் ஆப், டிக் டாக், பேஸ்புக், ஹலோ சாட் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.