துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா நடைமுறைகள், இந்தாண்டு ஜூலை மாதம் வரை தொடரும் என்பதால், கிரிக்கெட்டில் நியூட்ரல் அல்லாத நடுவர்களின் பங்களிப்பும் அப்படியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கிரிக்கெட் போட்டி நடைபெறும் சம்பந்தப்பட்ட நாடுகளின் நடுவர்களே போட்டிகளில் பங்கேற்பதுதான் இந்த விதிமுறை. இரு அணிகளுக்கும் தொடர்பில்லாத வெளிநாட்டு நடுவர் பங்கேற்கமாட்டார்.
ஐசிசி வழங்கியுள்ள பரிந்துரைகளுள், மிக முக்கியமானதாக பார்க்கப்படும் இது, சிஇசி அமைப்பாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மார்ச் 31ம் தேதி அல்லது ஏப்ரல் 1ம் தேதி கூடவுள்ள ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த முடிவுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பரிந்துரைகளுக்கு, கடந்தவாரம் நடைபெற்ற சிஇசி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், இறுதி அனுமதிக்காக, ஐசிசி வாரியத்திற்கு இந்தப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி பார்க்கையில், இங்கிலாந்தில் இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள இந்தியா – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடுவர்களே பங்களிப்பார்கள்.