சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து, அரசு உயர்அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது ஒமிக்ரான் பிறழ்வு வைரஸ் அதிதீவிரமாக உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதுடன் தமிழ்நாட்டிலும் 34 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையடுத்து, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பண்டிகை காலம் தொடங்கிவிட்டதால் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகள், கடை வீதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து ஒமைக்ரான் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டதாகவும், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடு களை அமல்படுத்து மற்றும் இரவுநேர ஊரடங்கு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக இன்று மாலை தமிழகஅரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.