சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சென்னையில், பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய கூடுதலாக 400 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.\
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இதையொட்டி, மாநில அரசு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, பேருந்துகளில் மக்கள் நின்றுகொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்துக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகரப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, இன்று முதல் 300 முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சசேரி, மணலி, கண்ணகி நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.