சென்னை: செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் கொரோனா உதவித் தொகை வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ரூ. 5,000 உதவித்தொகையும், யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில் தங்களின் உயிரையை பணையம் வைத்து கொரோனா பரவல் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசின் தடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்துவது என 24 மணி நேரமும் இரவு – பகலாக ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்கள் பெற்று வரும் உரிமைகள் ஊடகத் துறையினருக்கும் வழங்கப்படும் என மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளது ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசின் அங்கீகார அட்டைகள் வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே முதலமைச்சரின் அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அடையாள அட்டை இல்லாத ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது.

மேலும் காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர், செய்தி பிரிவு பணியாளர்கள், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அச்சு ஊடகங்களில் அச்சிடப்பட்ட பத்திரிக்கை கட்டுனர்கள் தொடங்கி மாவட்ட தலைநகர் நிருபர்கள், வட்டத் தலைநகர், ஒன்றியங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள நிருபர்கள், நிழற்பட நிருபர்கள், வாசகர்களுக்கு பத்திரிகை விநியோகிப்பவர்கள் என அனைவரையும் ஊடகப் பணியாளர்களாகவே கருத வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போதைய விதியை தளர்த்தி, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா நிவாரண சலுகைகள், உரிமைகள் கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது உயிரிழந்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்காத நிலை உள்ளது எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இதையும் கருத்தில் கொண்டு உயிரிழந்த ஊடகவியலாளர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் உடனடியாக நிவாரணம் வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகப்பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை வழங்கும் வகையில், அரசாணையை மேம்படுத்தி வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஊடகங்களின் செய்தியாளர்களை, கொரோனா எதிர்ப்புப் போரின் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, உடனடி உதவித்தொகையாக ரூ 5000; கொரோனா தாக்கி உயிர் இழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக உயர்த்தியும் ஆணை பிறப்பித்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, செய்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வரவேற்று இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ்நாடு முழுமையும் சேர்த்து, அரசு அடையாள அட்டை பெற்று இருக்கின்ற சுமார் 1500 பேர்கள் மட்டுமே இந்த வளையத்திற்குள் வருகின்றார்கள். முறையாக விண்ணப்பித்த பலருக்கு, அடையாள அட்டை கிடைக்கவில்லை. எத்தனையோ பேர் தகுதி இருந்தும் விண்ணப்பிக்காமல் இருக்கின்றார்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் பணிபுரிந்து வருகின்ற பல செய்தியாளர்கள், கேமராமேன்கள், படக்கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும்கூட, அரசு அடையாள அட்டை கிடைக்கவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரசு ஏற்பு அளித்து இருக்கின்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்று இருக்கின்ற துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படக்கலைஞர்கள் அனைவருக்கும், அரசு உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்  என கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அடைந்துவரும் துயரங்களைக் குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவசப் பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பால் மிகப்பெரும்பாலான பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பயனளிக்காமல் போய்விடும். ஒரு பத்திரிகை மற்றும் ஊடகத்தில் பணியாற்றும் அனைவரும், அரசு அங்கீகார அட்டையோ, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கும் அடையாள அட்டையோ அல்லது இலவச பேருந்து அடையாள அட்டையோ வழங்கப்படுவதில்லை ஒரு பத்திரிகையில் பணியாற்றும் மிக முக்கிய நபர்களுக்கும், வெளியூர்களுக்கு பயணிக்கும் ஊடக நபர்களுக்குமே மேற்குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனால் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர்கள் என பணியாற்றும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பலன்கள் கிடைக்காத சூழல் உள்ளது.

எனவே, ஆர்.என்.ஐ (REGISTRAR OF NEWSPAPERS FOR INDIA)யில் பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடகத்தை நடத்திவரும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா இழப்பீடு மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.