சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் குறைந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நேற்று 476 புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  கடந்த 3 மாதங்களுக்கு பிறகு நேற்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் பொதுஇடங்களில் கூடுபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும், இருடோடஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும்  தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் ‘நோ மாஸ்க், நோ எண்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. கண்டிப்பாக பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  விமான நிலையத்திற்குள் வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.   முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், விமான பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடுதான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அத்துடன் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை சுகாதாரத்துறையினர் பார்த்து முகவரி, போன் எண்களை குறித்து கொண்டு பயணிகளை வெளியே அனுப்புகின்றனர்.