சென்னை:
கொரோனா தடுப்பு நிதியாக திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் உள்பட பலர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதிகளை தாராளமாக வாரி வழங்கி வருகின்றனர்.
அதுபோல திமுக எம்எல்ஏக்களும் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
“கொரோனா தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் 21 நாட்கள் ஊரங்கு விதித்துள்ளது. பல்வேறு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக எம்.பி.க்கள் தங்களது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதிகளை வாரி வழங்கி உள்ளனர்.
தென்சென்னை திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே பாமக இளைஞர்அணி தலைவரான அன்புமணி ராமதாஸ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்குவதாகவும், அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிகளை கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கி உள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள, முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அளிப்பார்கள் என்றும் கூற உள்ளார்.
இதற்கிடையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.4ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில் இருந்து நம்மை பாதுகாப்போம்…