சென்னை: சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் கழிவுகளை சேகரிக்க 5 பயோ மெட்ரிக் பை வழங்கப்படுகிறது.
இதுவரை 300 டன் மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை 1500°சி வெப்பத்தில் எரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய ஊரடங்குதான் காரணம். அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 89 சந்தைகளும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும். வங்கிகளில் தேவையற்ற சேவைகளை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக்கவசம், கையுறை இல்லாமல் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும். இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.