புதுக்கோட்டை:

ந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக எம்எல்ஏக்களும், கொரோனா களப்பணியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்ஏக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரவி வருகிறது. இதனால் குளிர்கால கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அதிமுக எம்எல்ஏவான நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவரது மகன் முத்தமிழ் செல்வனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.