சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக, சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா நெகடிவ் என சோதனை முடிவு வந்திருப்பதாக, அவரது மகன் நடிகர் விஜய்வசந்த் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, ஆகஸ்டு 10ம் தேதி அன்று தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் (வயது 70)  சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா  குணமடைந்த நிலையில், மற்ற நோய்களின் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி,  ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், தனது தந்தை  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரோனாவில் இருந்து மீண்டும் மூச்சு விட ஆரம்பிக்கும் போது, அவரக்கு  பாக்டீரியா இன்பெக்‌ஷன் ஆனது. இதனால் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

கடந்த இரண்டு நாட்களாக எவ்வளவோ மருத்துவர்கள் போராடியும் அவரை காப்பாற்ற முடிய வில்லை. அப்பா நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அடுத்த கட்டமாக என்னுடைய வீட்டிற்கு அப்பாவின் உடல் கொண்டு செல்லப்படும். வேறு ஏதும் சொல்வதற்கு வார்த்தையே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.