சென்னை: தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக தமிழகஅரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திறக்க மத்தியஅரசு அனுமதி வழங்கிவிட்டது. அதனப்டி மத்திய அரசு நவம்பர் 1-ந்தேதி முதல் கல்லூரி முதல் ஆண்டு தொடங்கவும் அறிவுறுத்தியது. இதையடுத்து சில மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில்,  ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்த தமிழகஅரசு, மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில்   பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முதலாண்டு வகுப்புகள் நவ.23-ல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, முதல்வருடனும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்க தற்போதைய சூழல் சரியாக இருக்காது என்று அரசும், அதிகாரிகளும்  யோசிப்பதாக   கூறப்படுகிறது. இதன் காரணமாக,  பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.