சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக  சென்னையில் 2600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்   இதுவரை  17,34,804  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில்  397 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,131 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில் இதுவரை 14,52,283  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,63,390  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பு தலைநகர் சென்னையில் உள்ளது. நேற்று ஒரே நாளில்  6,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,62,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,105 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை  4,08,676 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 47,667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் 20.05.2021 நிலவரப்படி, மொத்தம் 17,80,217 பேருக்கும், 20.05.2021 அன்று 22,910 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. 6 பேருக்கு மேல் தொற்று உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதகளிக்க அறிவித்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 2600 இடங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக மாந்கராட்சி அறிவித்து உள்ளது. மேலும்,   3 பேருக்கும் குறைவாக தொற்றுகள் உள்ள பகுதிகளாக 6500 தெருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களை, முதன்மை செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் களப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.