புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அங்கு ஊரடங்கை கடுமையாக மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில கவர்னர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இன்று புதுச்சேரியில் கொ ரோனா தொற்றுக்கு புதிதாக 59 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதுபோன்ற கரோனா பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால் ஒரு நாளைக்கு புதியதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கொ ரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளால் உழைக்க வேண்டும்.
தயவு செய்து அனைவரும் வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும். பொது மக்கள் கடைக்கு செல்லும் போது சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்று முறைகளையும் பின்பற்றும் போது நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வரும் போது அழுக்குப் படிந்த காலணிகளை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். கிருமிநாசினிகளை கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படித்திக் கொள்ள வேண்டும்.
இந்த முறையை பயன்படுத்துவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தொழிற்சாலைகளில் பணிபயாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினர் உறுதி செய்து கொள்ள வேண்டும். தொழிலாளர்களை சமூக இடை வெளியுடன் பணியாற்றச் செய்வது, கிருமி நாசினிகளை போதுமான அளவு வைத்திருப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
இன்று புதுச்சேரியில் புதிதாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உள்ளது. அது நாளை 100 மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தயவுசெய்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்க கட்டாயம் நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாடுகளுடன் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.